குலங்குத்தி

குலங்குத்தி

கனலி விஜயலட்சுமி 

kanaliviji@gmail.com 

“ரீ… இங்க வா… உன் கூட கொஞ்சம் பேசணும். நான் முன்னால பறக்குறேன் என் கூடவே வா…”

“சரி ராணி இதோ நான் வந்துட்டேன்”

செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு உடனடியாக ராணி தேனீயின் பின்னால் ரீ பறந்து போனது. குட்டி தேனீக்களுக்கு கூட்டை சுத்தம் செய்யச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென்று இப்படி இளையராணி கூப்பிட்டது ரீக்கு ஆச்சரியமாக இருந்தது. இருந்தாலும் மறுத்துப் பேசவோ அனுசரிக்காமல் இருக்கவோ முடியாது என்பதால் இளையராணியுடன் உடனடியாகப் பறந்து வந்துவிட்டது. ஏதோ பேச வேண்டும் என்று சொல்லி வரச் சொல்லிவிட்டு பல மையில் தூரம் பறந்தாகிவிட்டது….. இன்னும் பறந்து கொண்டே இருந்தால் என்ன செய்வது என்று யோசித்தபடி, 

 

“ஏதோ பேச வேண்டும் என்று சொன்னீர்கள். ஆனால் இப்படிப் பறந்து கொண்டே இருந்தால் எப்படி?”

 

“இல்லை, கூட்டத்திலேயே இருந்தாலும் கூட நான் மிகத் தனிமையாக இருப்பது போல் தோன்றியது. அதனால் தான் உன்கிட்ட கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருக்க கூப்பிட்டேன்”

 

“நீங்கள் ராணி தேனீ. நான் வெறும் தொழிலாளி. உங்களுக்கு அப்படி ஒரு தோழி வேண்டும் என்று இருந்தால் உங்கள் கூட பிறந்த ஐந்து ராணிதேனீக்கள் இருந்தார்களே ஏன் அவர்களைக் கொன்று குவித்தீர்கள்?”

 

” ஐயோ, அதை நினைவூட்டாதே..நான் அதை விரும்பிச் செய்யவில்லை. நான் பிறந்த உடனேயே நீங்கள் ஐந்து பேரில் யார் மற்றவர்களைக் கொன்று உயிரோடு இருக்கிறீர்களோ அவர்கள்தான் அடுத்த ராணி தேனீ என்று மூத்த ராணி அறிவித்தது நீ கேட்கவில்லையா? நான் கொல்லாமல் இருந்திருந்தால் என்னைக் கொன்று இருப்பார்கள் அதனால் தான் கொன்றேன். அதை நினைத்து நான் இப்போதும் வருந்துவதுண்டு.”

 

“இதில் வருந்துவதற்கு என்ன இருக்கிறது. நீங்கள் இளையராணி வந்து விட்டீர்கள் இன்னும் சிறிது நாட்களில் மூத்த ராணியைக் கொன்று அப்புறப்படுத்தி விடுவார்கள். இதெல்லாம் நம் வாழ்வில் இயல்பாக நடப்பது தானே?”

 

“என்னது…. மூத்த ராணியையும் கொன்று விடுவீர்களா?”

 

“ஆமாம் ராணி, நீங்கள் இப்போது முட்டை போடத் தொடங்கி விட்டீர்கள் ஒரு கூட்டில் ஒரு ராணி தான் இருப்பது வழக்கம். நீங்கள் ஆரோக்கியமாகவும், எல்லோரும் உங்களைக் கண்டு மயங்கும் படி அழகாகவும் வளர்ந்து விட்டீர்கள் அதில் எங்களுக்கு மகிழ்ச்சி தான்.”

 

“உங்களுக்கு மகிழ்ச்சியா… எனக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி இல்லை. என்னுடைய வாழ்க்கையை நினைத்தால் எனக்கே வெறுப்பாக இருக்கிறது” 

 

“உங்களுடைய வாழ்க்கை மகிழ்ச்சியானது இல்லையா? நினைத்த பொழுது நினைத்த இடத்திற்கு பறந்து போகலாம். வேண்டிய அளவு தேன் குடிக்கலாம். வேண்டிய ஆண்களோடு உறவு கொள்ளலாம். எங்கு கூடு கட்டலாம். எங்கு கூட்டைக் கொண்டு போகலாம் என்றெல்லாம் தீர்மானிக்கும் மொத்த உரிமையும் அதிகாரமும் இருக்கும் நீங்கள் இப்படிச் சொல்லலாமா?”

 

“வெளியே இருந்து பார்க்கும் உனக்கு அப்படித் தோன்றலாம். ஆனால் என் நிலை அதுவல்ல. நூற்றுக்கணக்கான ஆண்கள் என்னோடு இணைசேர்வது என்னவோ உண்மைதான். ஆனால் ஒவ்வொரு முறையும் தனது விந்துவைக் கொடுக்குவழி என்னுள் பாய்ச்சி விட்டு அவர்களின் கொடுக்கை இழந்து உயிரை விட்டுக் கீழே விழும் போது நான் ஒரு கொலைகாரியாக எனக்கே தெரிகிறேன். ஒரு நாளைக்கு ஆயிரம் முட்டை போடும் நான் ஒரு முட்டை போடும் இயந்திரம் போலச் செயல்படுவதை நினைத்தால் எனக்கே என் மீது வெறுப்பாக இருக்கிறது.”

 

“நீங்க இதுக்கே இப்படி சலிச்சுக்கிட்டா எப்படி ?என்ன நெனச்சுப் பாருங்க. ஒரு துளி தேன் எடுக்குறதுக்கு நான் ஏறகுறைய 50 லிருந்து 80 மைல் பறக்க வேண்டி இருக்கும். ஒரு நூறு பூவிலயாவது மதுவ உறிஞ்சினாதான் ஒரு பெரிய துளி தேன் கிடைக்கும். அந்த மதுவை அப்படியே தேனாக்கவும் முடியாது அது உங்களுக்குத் தெரியும் தானே.. ஒரு நூறு தடவைக்கு மேல விழுங்கி ,உமிழ்ந்து, விழுங்கி, உமிழ்ந்து அப்புறம்தான் அது தேனாகும். அது மட்டும் இல்லாம அந்தப் பூக்கள்ல இருக்குற மகரந்தத்தை எல்லாம் உருட்டி ரெண்டு கால்லையும் பந்து மாதிரி ஒட்ட வச்சுட்டு திரும்பக் கூட்டுக்கு வரும்போது எவ்வளவு களைப்பாகும் தெரியுமா உங்களுக்கு? அப்படிக் கொண்டு வர்ற தேன் சிலதெல்லாம் ரொம்பத் தண்ணி மாதிரி இருக்கும். அதைக் கூட்டுல போட்டு சிறகில அடிச்சு உலர வச்சு சரியான கட்டியான பிற்பாடு தான் ஒவ்வொரு பொந்துக்குள்ள போட்டு மகரந்தத்தை வைத்து அடைக்கணும். இவ்வளவையும் செஞ்சு முடிச்சிட்டு அப்பாடா.. என்று உட்காரவை எல்லாம் முடியாது. வேலைகள் வந்துகிட்டே இருக்கும் செய்து கொண்டே இருப்போம்.”

 

” நான் குடிக்கிற ஒவ்வொரு துளி தேனுக்குப் பின்னால இவ்வளவு அலைச்சலும் உழைப்பும் இருக்குன்னு எனக்குத் தெரியாது. உலகத்திலேயே அழகான பொருள் பூ  இல்லையா? எவ்வளவு அழகா… மணமா…. வகை வகையா கண்ணக் கவர்ற மாதிரி… அதுல போயி நேரா தேனை உறிஞ்சிட்டு வந்து இங்க உமிழ்ந்து வச்சுருவீங்கன்னு.தான் நான் நெனச்சிட்டு இருந்தேன்”

 

“வெளியில் இருந்து பாக்குறப்ப தான் அழகா இருக்கும்…. சில பூவுக எங்களையே தின்னுடும் தெரியுமா?.அழகா இருந்தாலும் அது எங்களுக்கு வேலை செய்யற பணியிடம் தானே? அதையெல்லாம் ரசிக்கிறதுக்கு எங்களுக்கு எங்கே நேரம்?.அத விடுங்க ராணி.. நீங்க ஏதோ என் கூட பேசணும்னு சொன்னீங்களே என்னது”

 

“அது ஒன்னும் இல்ல. நம்ம கூட்டுல புதுசா ஒரு ஆண் தேனீ வந்து இருக்குது பாத்தியா?”

 

“ஓ அந்த முரடனப்பத்தி கேக்குறீங்களா? அவன் ஏதோ குறிஞ்சி மலையில் இருந்து வந்து இருக்கானாம். பாக்குறதுக்கு பயங்கரமா இருக்கான்ல? அவன் பேரு பி. பாக்குறதுக்கு அப்படி இருந்தாலும் எல்லார் கூடவும் ரொம்ப சகஜமாகத்தான் பழகுறான். அவன் எங்க இருந்தாலும் உங்களைத் தான் பாத்துட்டே இருக்கிறான்.”

 

“அவன் நம்ம கூட்டத்துல பட்டவன் அல்லவே அப்புறம் எப்படி உள்ள விட்டீங்க?”

 

“அது தெரியாதா உங்களுக்கு? எங்கள மாதிரி உழைப்பாளி பெண் தேனீக்களுக்குத் தான் வேற கூட்டுக்குப் போகனும்னா 

 நிறைய நிபந்தனை. நிறைய தேனும் மகரந்தமும் கொண்டு போயி கூட்டுக்கு முன்னால இருந்து கெஞ்சி கால் புடிச்சா தான் சேத்துக்குவாங்க. ஆனா இந்த ஆண் தேனீக்களுக்கு அப்படி எந்த நிபந்தனையும் கிடையாது. எந்தக் கூட்டுக்கு வேணாலும் போகலாம் எங்க வேணாலும் தேன் குடிக்கலாம். எல்லாத் தேனீ கூட்டங்களும் அவங்கள ஏத்துக்குவாங்க. அவங்க கூட்ல இருக்கிற ராணி கூட இணையறதுக்கு இந்த மாதிரி வேற வேற இனத்துல இருக்குற ஆண் தேனீக்கள் வர்றது நல்லது அப்படின்னு தான் நினைக்கிறாங்க.. கொடுத்து வச்சவங்க”

 

“அவன் என்னையே பாத்துட்டு இருக்கான் அப்படின்னு எப்படித் தெரிஞ்சுது உனக்கு?”

 

“கூட இருக்கிற ஆண்தேனீக்கள் சொல்லிப் புலம்புறத நான் கேட்டேன். உங்களக் கண்ணு வச்சுத் தான் அவன் இங்க வந்து இருக்கான். நேத்து நீங்க இணசேர  மேல பறந்து போன போது அவனும் பின்னாலே பறந்து வர்றதை நான் பார்த்தேன். உங்ககிட்ட வரலையா?”

 

“வந்தா வந்தான்… நான் தான் கண்டுக்காம அவனை விரட்டி விட்டுட்டேன்.”

 

“ராணி… ஏதோ கூட்டுல பிரச்சனை மாதிரி இருக்கு. எனக்கு அதிர்வுகள் வருது. நான் உடனே திருப்பிப் போகணும். நாம அப்புறம் பேசலாம். நான் கிளம்புறேன்”

*************************************

 

“ராணி.. ஏன் என்ன இப்படி உதாசீனப்படுத்திட்டே இருக்கே… என்னப் பிடிக்கலையா.. இல்ல நான் வேற குலத்தை சேர்ந்தவன்னு சொல்லி என்னை ஒதுக்குறியா?”

 

“அப்படி இல்ல பி.”

 

“அப்புறம் ஏன் நான் தினமும் உன் பின்னால வரேன். என் கண்ணு முன்னாலேயே நீ எத்தனையோ ஆண்களோட உறவு வச்சுக்கிற… ஆனா என்னை மட்டும் ஏத்துக்க மாட்டேங்குற? நான் பக்கத்துல வரும்போது விலகி விலகி பறந்து போயிட்டே.. இருக்கே ஏன்?”

 

“ஏன்னா… உன்னை இழக்க நான் விரும்பல. நீ என் கூட இருக்கணும்னு நான்  ஆசைப்படுறேன்.”

 

“முட்டாள்தனமா பேசாத… ஒவ்வொரு நாளும் நான் கூட்டில் இருந்து வரும்போது என்கூட இருக்கிற ஆண் தேனீக்கள் எல்லாம் என்னப் பார்த்து கேலி பண்றாங்க. இன்னைக்காவது உன் கனவு நடக்குமா?. உனக்கு மத்த சமாச்சாரமே இல்லையோ? நெஜமாவே நீ ஆம்பள தானா?  அப்படின்னு கேலி பண்றாங்க”

 

“அவங்களப் போச் சொல்லு. உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். நாம அந்தப் பெரிய கூட்டுல, லட்சக்கணக்கான தேனீக்கள் கூட இருந்தாலும் நீ ஏதாவது ஒரு மூலையில் இருந்து என்னைக் கவனித்துக்கொண்டே இருக்கிறேங்கிற உணர்வு இருக்குது இல்லையா? அது அவ்வளவு சந்தோஷமா இருக்கு. எனக்கு இதுவரைக்கும் எந்த ஆண் தேனீ கூடவும் இப்படியான ஒரு ஈர்ப்பு வந்ததே இல்லை. அதை நான் இழக்க விரும்பல. நீ என்கூட இணைஞ்சீனா நீயும் மத்த தேனீக்கள் மாதிரி உயிரை விட வேண்டி இருக்கும். அதை நினைக்கவே எனக்குப் பயமா இருக்கு.”

 

“நீ தப்பா புரிஞ்சு வச்சிருக்க. என்ன மாதிரி ஒவ்வொரு ஆண் தேனீயோட வாழ்க்கை லட்சியமே அதுதான். உன்ன மாதிரி அழகான ஒரு ராணி கூட அந்தரத்துல பறந்து,  உன்னை இறுக அணைச்சு உனக்குள்ள என் உயிரைப் பாய்ச்சும் அந்த ஒரு உச்சகட்ட வினாடி இருக்கு இல்லையா? அதைவிட மகிழ்ச்சியா வேற எதுவுமே இருக்க முடியாது. அதுக்காகவே பிறவி எடுத்தவங்க நாங்க. அந்த ஒரு மகிழ்ச்சியை தர நீ ஏன் மறுக்கிறே.”

 

“நீதான் முட்டாள்தனமா யோசிக்கிற. இயந்திரத்தனமான என் வாழ்க்கையில் இருந்த சோர்வை நீக்குனதே நீதான். நீ வந்த பிற்பாடு தான் ஒவ்வொரு நாளும் எனக்கு மகிழ்ச்சியாகவும் வாழனும்னே தோணுது. எங்கிருந்தாலும் உன்னுடைய பார்வை பட்டுக்கிட்டே இருக்கணும்னு ஆசையா இருக்கு. இந்த காத்திருப்பில் ஒரு சுகம் இருக்கிறது உனக்கு தெரியலையா?. இது நீடிக்கணும்னா நீ உயிரோடு இருக்கணும். தயவு செஞ்சு நான் சொல்றதப் புரிஞ்சுக்கோ.”

 

“சக ஆண்களுக்கு இடையில ஒவ்வொரு நாளும் நான் ஏதோ ஆண்மை இல்லாதவன் மாதிரி செத்துகிட்டு இருக்கேன் அது உனக்குத் தெரியலையா? அதையெ ஏன் நீ புரிஞ்சுக்க மாட்டேங்குற?”

 

“அப்படின்னா என் மேல உனக்கு அன்பு எல்லாம் ஒன்னும் இல்ல இல்லே… வெறும் காமம் தானா? என்னுடைய ஆசையை நிறைவேற்றனும்னு உனக்கு தோணவே இல்லையா? உன் கூட இருக்கிறவங்க முன்னால நீ செத்து, உன் திறமையைக் காட்டணும்னு நினைக்கிறியே, அவ்வளவு தானா?”

 

“என்னுடைய உணர்வுகளைப் புரிஞ்சுக்கணும்னா நீ ஒரு ஆண் தேனீயாப் பொறக்கணும். அப்பதான் தெரியும். என்னை விட மிகச் சராசரியான ஆண் தேனீக்கள் கூட தினமும் உன் கூட இணைந்து, உயிரை விட்டுட்டு வரும்போது நான் இவ்வளவு வீரனா இருந்தும் உன்னை அடைய முடியலை என்பது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா?”

 

“உன் உணர்வுகளை எனக்குப் புரிய முடியுது. அதே நேரத்தில் ஒரு வினாடி என் உணர்வுகளையும் நீ புரிஞ்சுக்கலாம் இல்லையா? நூற்றுக்கணக்கான ஆண்கள் என்கூட இணையறப்ப ஏற்படுற அந்த ஒரு வினாடி அதிர்வு தான் நீ என் கூட இணையறப்பவும் ஏற்படும் எனக்கு…. ஆனா அதை விட நூறு மடங்கு உன் பார்வையில் எனக்கு ஆனந்தமும் நிறைவும் இருக்கு. அதை இழந்துட்டு நீ சாகணும்னு சொல்லும் போது நான் என்ன சொல்ல முடியும்.”

 

“என்ன பெரிய சாவு? உலகத்தில் பிறக்கிற எல்லா உயிர்களும் ஒரு நாளைக்குச் சாகத்தான் போகுது. நீயும் நாளைக்குச் சாகத்தான் போற. அதச் சந்தோஷமா இருந்து சாக வேண்டியது தானே? நீ சொல்ற அன்பு, காதல், பாசம் இதெல்லாம் உண்மையிலேயே என் கூட உனக்கு இருக்குதுன்னா இன்னைக்கு நீ என்னை ஏத்துக்கணும்… இன்னைக்கு நான் திரும்ப அந்த கூட்டுக்குப் போகும்போது ஒவ்வொருத்தனும் என்ன ஏளனமாப் பாக்குறத நெனச்சா பேசாம செத்துப் போயிடலாமானு இருக்குது.”

 

“உயிருக்கு உயிரா விரும்புற, வாழ்நாள் முழுவதும் கூடவே இருக்கணும்னு ஆசைப்படுற ஒருத்தன், இப்படி வந்து தற்கொலை பண்ணனும்னு கேட்டா நான் என்ன பண்ணட்டும்?.”

 

“அது தற்கொலை இல்ல ராணி. அது மோட்சம். அது வாழ்க்கையின், இன்பத்தின் உச்சகட்ட ஆனந்தம். அவ்வளவுதான். அப்புறம் வாழ்றதுல அர்த்தமே இல்ல. அந்த ஆனந்தப் போதையில அப்படியே காத்தோட காத்தா இணைஞ்சு, பறந்து, ஒரு இலவம்  பஞ்சு மாதிரி கீழே விழுகிற ஒரு நிறைவு இருக்குது இல்லையா? அதுல ஒரு திருப்தி இருக்கு. அதுல ஒரு மகிழ்ச்சி இருக்கு. அந்த ஒரு வினாடி தான் தினமும் நான் கனவு காணுகிற மிகப்பெரிய சொர்க்கம். தயவுசெய்து அதை எனக்குத் தர மறுக்காதே புரிஞ்சுக்கோ ராணி.”

 

“நீ எவ்வளவு மேன்மைப்படுத்தி, அதை வர்ணிச்சு சொன்னாலும் என்னால உன் மரணத்தை ஏத்துக்க முடிய மாட்டேங்குது பி.”

 

“இதோ பாரு உன் பக்கத்துல வந்து உன்னை அணைச்சுக்கிட்ட போதே… இவ்வளவு ஆனந்தம்னா. உன் கூட இணைகிற அந்த வினாடி எவ்வளவு ஆனந்தமா இருக்கும்..”

 

“ஆமா உன்னுடைய அணைப்புல ஒரு ஆனந்தம் இருக்கத்தான் செய்யுது. இதோ கீழ நம்ம கூடு தெரியுது பாத்தியா… இப்படியே நம்ம இணை பிரியாத காதலர்களாகவே தொடரலாமே?”

 

“இல்ல ராணி.. இதோ பார்த்தியா உன்னை அணைத்து கொண்டபோதே ஒரே புகை மூட்டமா….வேற ஏதோ ஒரு உலகத்துக்கு வந்த மாதிரி இருக்குது பார்த்தியா… கண்ணெல்லாம் கிறங்குது. இது ஒருவேளை சொர்க்கமா இருக்குமோ?”

 

“இல்ல பி. ஏதோ பிரச்சனை மாதிரி இருக்கு. எனக்கு மூச்சு முட்டுது… வா கீழே போகலாம்”

 

“இல்ல நான் உன்னை விட மாட்டேன் ராணி. இவ்வளவு நாள் நான் காத்திருந்தேன் இல்லையா. அந்தக் காத்திருப்புக்காவது நீ ஒரு மரியாதை கொடுக்கணும். தயவு செஞ்சு புரிஞ்சுக்கோ”

 

“அதுக்கு மேல உன் விருப்பம்”

 

****************************************

 

“எடி அல்லி… இங்குடு வரி.. அப்பன்  நினக்கொரு சாதனம் கொண்டு வந்துட்டு உண்டு”

 

“எந்தப்பா… எந்தானது?”

 

“நீயல்லே சோதித்தது நினக்கு ராணி தேனீச்சயெக் காணனம் என்னு. இதாண்டே இவிட வந்நு நோக்கு….”

 

“ஐயோ அதினே கொன்னானோ கொண்டு வந்நது?. எந்தினா அப்பா அதினே கொன்னது? ஞான் அதினே ஜீவனோடு காணனம் என்னானு பறஞ்ஞது.”

 

“எடி மோளே…. தேனீச்சையே புகையிட்டு கொன்னுட்டல்லே அதிலெ தேன் எடுக்கான் கழியுகயுள்ளு…. அது போகட்டு.

இது கண்டோ குறையே தேனீச்சளுக்கு மத்தியில் வலிய ஈ… தேனீச்ச கண்டோ… இதானு ராணி தேனீச்சா.”

 

“அது எந்தா அப்பா வேறொரு வலிய தேனீச்சையோடே ஒட்டி இருக்குன்னது?”

 

“அது ஒருபக்சே இணசேரும்போள் ஆயிருக்கும் நம்மள் புகையிட்டுக் கொன்னது.”

 

“ஐயோ பாவம்… அதின்டெ குலம் நசிச்சு போயில்லே? அப்பன் ஒரு குலம் குத்தி ஆய் போயல்லோ? எனிக்கி ஆ…தேனு வேண்டா….”

 

“ஞான் குலங்குத்தியோ ?”

 

“ஒரு குலத்தினெ நசிப்பிச்ச அப்பன் ஒரு  குலம் குத்தி தன்னே.”

 

************

Scroll to Top